புதிய SLM தொழில்நுட்பங்கள் மற்றும் நல்ல விவசாய நடைமுறைகளைப் பின்பற்றும் போது காய்கறி விவசாயிகள் சந்திக்கும் தடைகளை தனியார்-பொது கூட்டுப் பங்காண்மை வெற்றி காண்கின்றது. சந்தைப்படுத்தல், மதிப்பு கூட்டல், சான்றளிப்பு மற்றும் நிதி உதவி ஆகியவற்றில் தனியார் துறை உதவுகிறது. டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி (உதாரணமாக) உழவர் களப் பள்ளிகள் மூலம் உழவர் பயிற்சி தேவைகளை பொதுத்துறை பூர்த்தி செய்கிறது. சராசரி ஆண்டு மழைப்பொழிவு ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் மலைப்பாங்கான மற்றும் உருளும் நிலப்பரப்பில் காய்கறி வளரும் நிலங்களில் இந்த அணுகுமுறை செயல்படுத்தப்பட்டது: ஈர மண்டலம் (>2500 மிமீ) இடைநிலை மண்டலம் (1750-2500 மிமீ-குறுகிய வறண்ட காலம்). இந்தப் பகுதிகளில் மண் அரிப்பைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியமானது. மேலும், விவசாய இரசாயனங்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் தவறான பயன்பாடு விவசாயிகளிடையே பொதுவானது.
விவசாயிகள் சந்தை வாய்ப்புகளின் பற்றாக்குறை, தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியின்மை மற்றும் இடைநிலை மண்டலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றை அனுபவிக்கின்றனர், இது விவசாயத்தை 1 அல்லது 2 பயிர் சுழற்சிகளுக்கு கட்டுப்படுத்துகிறது. இந்த அணுகுமுறை காய்கறி விவசாயிகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதன் மூலம் மண் அரிப்பைக் குறைப்பதற்கும், உரம் மற்றும் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்கும், போதுமான சந்தை வாய்ப்புகள் மற்றும் தயாரிப்பு மதிப்பு கூட்டல் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
களத்தில், பின்வரும் தொழில்நுட்பங்கள் ஒரு தொகுப்பாக செயல்படுத்தப்பட்டன: பிளாஸ்டிக் தழைக்கூளம், படிக்கட்டு முறை, சொட்டு நீர் பாசன அமைப்புகள், பசளை விநியோக அலகுகள் மற்றும் பூச்சி தடுப்பு வலைகள். மேலும், தொடர்ச்சியான கண்காணிப்புடன் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன, தொழில்நுட்பங்களைப் பின்பற்ற நிதி உதவி வழங்கப்பட்டது. சந்தை வாய்ப்பு " GAP -சான்றிதழ்" (GAP = நல்ல விவசாய நடைமுறைகள்) மூலம் மதிப்பு கூட்டலால் விரிவாக்கப்பட்டது மற்றும் தனியார் துறை ஈடுபாடு சந்தைக்கு இலகுவான மற்றும் பாதுகாப்பான அணுகலை எளிதாக்குகிறது.
இந்த தொழில்நுட்பத் தொகுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் விவசாயிகள் பாசன நீரில் கலந்த உரமான "fertigation" இனால் உர பயன்பாட்டை சுமார் 70-80% குறைக்க முடிந்தது. மேலும், பூச்சி தடுப்பு வலைகள் காரணமாக பூச்சி தாக்குதல்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தேவை கணிசமாக குறைந்துள்ளது. பிளாஸ்டிக் தழைக்கூளம் காரணமாக களைகளின் வளர்ச்சி மிகக் குறைவாகவே இருந்தது, இது முன்பு விவசாயிகள் கைமுறையாக களைகளைக் கட்டுப்படுத்துவதால் ஏற்பட்ட தொழிலாளர் செலவை கணிசமாகக் குறைத்தது. படிக்கட்டு விளிம்பில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தழைக்கூளம் காரணமாக மண் அரிப்பு குறைவாக இருந்தது. சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பயன்பாட்டு திறன் மேம்படுத்தப்பட்டது மற்றும் குறுகிய வறட்சி காலங்களால் விவசாயம் பாதிக்கப்படவில்லை. இந்தத் தொழில்நுட்பத் தொகுப்பைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் அனுபவிக்கும் ஒட்டுமொத்த செலவுக் குறைப்பு சுமார் 20% ஆகும். மேலும், விளைச்சல் அதிகரிப்பு சுமார் 20% ஆக இருந்தது, இது லாபத்தை 30% ஆக உயர்த்தியது. போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பூச்சிக்கொல்லிகளை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் பூச்சிக்கொல்லி கொள்கலன்களை பாதுகாப்பாக அகற்றுதல் ஆகியவை GAP-சான்றிதழுக்கு தகுதி பெறுவதற்கு கட்டாயமாகும். இந்த அணுகுமுறையை கடைப்பிடிக்கும் விவசாயிகள் பண்ணையில் குறிப்பிட்ட இடத்தில் பூச்சி மருந்து கொள்கலன்களை சேகரிக்கின்றனர்.
அணுகுமுறையின் செயல்படுத்தல் பின்வருமாறு:
1. தனியார்-பொது கூட்டுறவை உருவாக்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் விவசாயத் திணைக்களம், இலங்கை (DOA) இடையேயான கலந்துரையாடல்.
2. தனியார் துறை சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடமிருந்து முன்மொழிவுக்கான அழைப்பு.
3. கார்கில்ஸ் (சிலோன்) பிஎல்சியின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
4. கார்கில்ஸ் காய்கறி சேகரிப்பு மையங்களை எளிதில் அணுகக்கூடிய பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஹங்குரன்கெத்த மற்றும் நுவரெலியா, பொரலந்த மற்றும் பண்டாரவளை சேகரிப்பு நிலையங்கள் முன்னோடி திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டன.
5. ஏற்கனவே நிறுவப்பட்ட மரக்கறி சேகரிப்பு நிலையங்களுக்கு காய்கறிகளை வழங்கி வரும் 80 முற்போக்கு விவசாயிகள் ஆரம்ப வேலைத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.
6. தொழில்நுட்ப தொகுப்பு, GAP சான்றிதழ் செயல்முறை மற்றும் சந்தை ஏற்பாடு ஆகியவை பற்றிய விவசாயிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உழவர் களப் பள்ளிகள் நடத்தப்பட்டன.
7. விவசாயி களின் நிலங்களில் தொழில்நுட்ப தொகுப்பு நிறுவப்பட்டது. மூலப்பொருட்களைப் பெறவும் மூலதனச் செலவை ஈடுகட்டவும் (உ+ம் பொலித்தீன், சொட்டு நீர் பாசன முறை, பூச்சித் தடுப்பு வலைகள் மற்றும் துணைப் பொருட்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்) விவசாயிகள் நிதி ரீதியாக ஆதரிக்கப்பட்டனர். தொகுப்பை செயல்படுத்த மதிப்பிடப்பட்ட செலவு கால் ஏக்கருக்கு ரூ. 300,000 (ரூ. 2.96 மில்லியன்/ ஹெக்டேயர் = அண்ணளவாக UD$ 8950/ha). Cargills (Ceylon) PLC மற்றும் FAO நிதியுதவி திட்டமான RDAL (இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைப்பழிவடைந்த விவசாய நிலங்களின் மறுசீரமைப்பு) 2/3 வீத பொருள் செலவை சமனாக பகிர்ந்து கொண்டது. மீதி செலவு விவசாயியிடம் இருந்து எடுக்கப்பட்டது. தேவைப்படும் விவசாயிகளுக்கு கார்கில்ஸ் வங்கி, மூலதனச் செலவில் அவர்களின் பங்கை ஈடுகட்ட, குறைந்த வட்டியில் கடனை வழங்கியது.
8. தொடர் கண்காணிப்பு மற்றும் திறன் மேம்பாடு மற்றும் ஊக்கமளிக்கும் திட்டங்கள் கள வருகைகள் மற்றும் WhatsApp குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டது.
9. காய்கறிகளுக்கு GAP- சான்றிதழ் வழங்கப்பட்டது
10. நிலையான விகிதத்தை விட உத்தரவாதமான 10% பிரீமியத்துடன் கார்கில்ஸால் சந்தை வழங்கப்பட்டது.
11. செயல்படுத்தும் செயல்முறையுடன், வேறு சில முன்னேற்றங்களும் ஏற்பட்டன: விவசாயிகளின் வயல்களுக்கு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வழங்குதல், மற்றும் கார்கில்ஸ் மூலம் விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்விக்கான உதவித்தொகைகளை வழங்குதல்.
அணுகுமுறையின் வரம்புகள் பின்வருமாறு: முதலாவதாக, GAP-சான்றிதழைப் பெறுவதற்குத் தேவையான கடுமையான பதிவுகளை வைத்திருக்கும் செயல்முறையைப் பின்பற்ற விவசாயிகளின் தயக்கம்; இரண்டாவதாக, பூச்சிக்கொல்லி கொள்கலன்களை மீள்சுழற்சி அல்லது மேல்சுழற்சி செய்வதற்கு சரியான முறை இல்லாதது; மூன்றாவதாக, GAP-சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகள் பற்றிய நுகர்வோர் விழிப்புணர்வு இல்லாதது. அணுகுமுறையின் முக்கிய நோக்கங்களாவன, விவசாயிகளின் செலவை 20% ஆல் குறைப்பது, விளைச்சலை ஆல் 20% அதிகரிப்பது மற்றும் லாபத்தை ஆல் 30% அதிகரிப்பது, அதே நேரத்தில் நிலையான நில முகாமைத்துவத்தை மேம்படுத்துவது. சான்றளிக்கப்பட்ட உணவுகளுக்கான நுகர்வோர் தேவையை நிவர்த்தி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு சந்தைக்கு அதிக அணுகலை வழங்க இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுப்பாளர்: தலைவர், மண் விஞ்ஞானத் துறை, விவசாய பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்
இணைத் தொகுப்பாளர்கள்: கலாநிதி சம்மி அத்தநாயக்க, தரிந்து குலசிங்க (மண் விஞ்ஞானத் துறை, விவசாய பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்)
முக்கிய வளவாளர்கள்: நிமல் குணசேன (ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு)
தரிந்து ஜெயவீர (கமநல சேவை நிலையம், விவசாய திணைக்களம், இலங்கை)
டி.எல். மனோஜ் கருணாதிலக (கார்கில்ஸ் (சிலோன்) பிஎல்சி, இலங்கை)
சண்டிக குணதிலகா (கார்கில்ஸ் அக்ரோ டெவலப்மென்ட் நிறுவனம், கார்கில்ஸ் (சிலோன்) பிஎல்சி, இலங்கை)
காணி பாவனையாளர்கள்: ஹேரத் முதியன்செலாகே லீலாரத்ன (கெட்டகெல, அம்பேகொட, பண்டாரவளை)
கே.எம்.எஸ்.ஜே ஜயசிறி பண்டார (கெட்டகெல, அம்பேகொட, பண்டாரவளை)